11/26/2008

தமிழர் - சிங்களவர்களை பிரித்து வைக்க வேண்டிய பொறுப்பு பிரித்தானியாவிற்கே உள்ளது - வைகோ



தமிழர் - சிங்களவர்களை பிரித்து வைக்க வேண்டிய தார்மீக பொறுப்பு பிரித்தானியாவிற்கே உள்ளது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலர் வைகோ பிரித்தானியாவில் இடம்பெற்ற பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.


நேற்று முன்தினம் பிரித்தானிய வந்திருந்த வைகோ அவர்கள் நேற்று நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினர். 1833ம் ஆண்டு இலங்கையை ஆக்கிரமித்த பிரித்தானியா தங்களின் ஆட்சி வசதிக்காக சிங்கள மக்களின் தேசத்தையும் தமிழ் மக்களின் தேசத்தையும் ஒன்றாக இணைத்து ஆட்சி நடத்தினார்கள். 1948ம் ஆண்டு நாட்டைவிட்டு வெளியேறும் போது பெரும்பான்மை சிங்கள இனத்திடம் மட்டும் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு திரும்பிவிட்டார்கள்.


பிரித்தானியாவின் இந்த நடவடிக்கையே தமிழ் மக்களின் இத்தனை அவலங்களுக்கும் காரணம் என்பதை தெளிவு படுத்தியவர், இந்த நிலைமைக்கு காரணமான பிரித்தானியா தமிழ் மக்களுக்கான நீதி கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டியது அவர்களின் தார்மீக கடமை என்றும் எடுத்துக் கூறினார்.
இதேவேளை, நாளை பிரித்தானியாவில் இடம்பெறும் தமிழ் தேசிய மாவீரர் நாள் நினைவு நிகழ்விலும் வைகோ அவர்கள் பங்கேற்று உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படாதது வேதனை- கருணாநிதி

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 25, 2008

மீனவர்கள் சுடப்பட்டு வந்த சம்பவங்கள் நின்றிருக்கின்றன. பட்டினி கிடக்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, உடை, மருந்து போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்பது தான் வேதனை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.இலங்கை விவகாரம் தொடர்பாக சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:


கேள்வி: இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாத கட்சிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள், அவர்களுக்கு இந்தப் பிரச்சனையில் அக்கறை இல்லையா?கருணாநிதி: அப்படியெல்லாம் சொல்லமாட்டேன். அவர்கள் வராதது பற்றி உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
கேள்வி: ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி யிருக்கிறார்களே?


கருணாநிதி:அதைப்பற்றியெல்லாம் விமர்சிக்க விரும்பவில்லை.


கேள்வி: இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?


கருணாநிதி: தீர்மானத்தில் விவரமாகச் சொல்லியிருக்கிறோம். மீண்டும் நேரிலும் சந்திக்கவிருக்கிறோம். வரும் 28ம் தேதியன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரைச் சந்திப்பது என்று இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு டிசம்பர் 4ம் தேதி என் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமரைச் சந்திப்பது என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.


கேள்வி: இலங்கையில் போரையே இந்திய அரசு தான் நடத்துகிறது என்று வைகோ பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறாரே?. இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்களையெல்லாம் கொடுத்து போரையே மறைமுகமாக இந்திய அரசு தான் நடத்துகிறது என்கிறாரே?
கருணாநிதி: இதற்கு இந்திய அரசு பதில் சொல்லும்.
கேள்வி: இலங்கை அகதிகளையெல்லாம் தமிழகத்திலிருந்து விரட்டுவதாக தா.பாண்டியன் மீண்டும் குற்றம் சாட்டியிருக்கிறாரே?
கருணாநிதி: அது தவறான, பொய்யான தகவல். பீதியை கிளப்புகின்ற தகவல். அந்தச் செய்தியைப் பரப்பியவர் தோழர் தா. பாண்டியன். நேற்றையதினம் அதற்கு அரசு சார்பில் ஒரு மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த மறுப்புக்கு மறுப்பாக, இன்றைக்கு அவர்களுடைய பத்திரிகையில் முதல் பக்கத்தில் கட்டம் கட்டி ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள்.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வசந்தன் என்பவருக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை அந்தப் பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார்கள். தனிப்பட்ட ஒருவரை வெளியேற்றுவது சம்மந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை, இலங்கை அகதிகள் அனைவருக்கும் அனுப்பப்பட்டதாகச் சொல்லியிருப்பது தவறான கூற்று. அவர்களுடைய ஜனசக்தி பத்திரிகையில் நான் சொன்னது தவறு என்று கட்டம் கட்டி செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.இன்று விடியற்காலை 5 மணிக்கு அதை நான் படித்துப் பார்த்து விட்டு, உடனடியாக நீலகிரி மாவட்டத்தினுடைய எஸ்பிக்கு போன் செய்து, விரிவான தகவல் கேட்டபோது, அவர் சொன்ன விளக்கம்- வசந்தன் என்பவர் எல்.டி.டி.ஈ. இயக்கத்திற்குள்ளேயே முரண்பாடு கொண்ட கருணா குழுவினருக்கு துணையாக இருந்து அந்தப் பகுதியிலே ஏராளமான பணத்தை வசூலித்து செலவு செய்து வந்தார் என்றும், அவருடைய நடவடிக்கைகள் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிப்பதாக இருந்ததால், அவருடைய பதிவை ரத்து செய்து, அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு க்யூ பிரிவு கண்காணிப்பாளரிடமிருந்து அறிவுரை வந்தது என்றும், அதையொட்டித் தான் அவரை வெளியேறுமாறு, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது என்றும் கூறினார். இந்த நோட்டீஸ் அவர் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வேறு எவருக்கும் வழங்கப்படவில்லை.நீலகிரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 281 இலங்கை அகதிகளும், சுமார் ஒரு லட்சம் தாயகம் திரும்பிய இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களும் வசித்து வருகிறார்கள். இவர்கள் எவருக்கும் இவ்வகையான நோட்டீஸ் எதுவும் வழங்கப்படவில்லை.
கேள்வி: அனைத்துக் கட்சித் தலைவர்களையெல்லாம் பிரதமரைச் சந்திக்க டெல்லிக்கு அழைத்துப் போகப் போவதாக சொல்லியிருக்கிறீர்கள். இன்றைய கூட்டத்திற்கு வராத கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுமா?
கருணாநிதி: எல்லோரையும் அழைப்பேன். இன்றைய கூட்டத்திற்கு வரவில்லை என்பதற்காக நான் யாரிடமும் கோபித்துக் கொண்டு அழைப்பு அனுப்பாமல் இருக்க மாட்டேன்.


கேள்வி: இன்றைய கூட்டத்திற்கே வராத கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், தலைவர்களும் நீங்கள் பிரதமரை சந்திக்கச் செல்லும்போது வருவார்களா?


கருணாநிதி: நான் எதிர்பார்ப்பது தவறல்ல.


கேள்வி: இங்கிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் முறையாகத் தமிழர்களுக்குக் கிடைக்காமல் ராணுவம் தடுப்பதாக செய்தி வருகிறதே?


கருணாநிதி: இன்று காலையில் கூட முறையாக வழங்கப்படுவதாக செய்தி வந்தது. தவறு நடப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது சரியல்ல.


கேள்வி: இலங்கை போன்ற சிறிய நாடு, இந்தியா போன்ற பெரிய நாட்டை மதிக்காததற்கு என்ன காரணம்?


கருணாநிதி: டெல்லிக்குச் செல்லும்போது அதைப்பற்றியெல்லாம் விரிவாகப் பேசுகிறோம்.


கேள்வி: வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தங்களை சந்திக்க வந்தபோது சில உறுதி மொழிகளையெல்லாம் கொடுத்தார். அதன் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா?


கருணாநிதி: மீனவர்கள் சுடப்பட்டு வந்த சம்பவங்கள் நின்றிருக்கின்றன. பட்டினி கிடக்கின்ற தமிழர்களுக்கு உணவு, அவர்களுடைய தேவைகளுக்கான உடை, மருந்து போன்றவை மத்திய அரசின் தூண்டுதல் காரணமாக வழங்கப்பட்டு வருகின்றன. இவைகளுக்கெல்லாம் மேலாக உள்ள குறைபாடு, வேதனை போர் நிறுத்தம் நடைபெறவில்லையே என்பது தான்.


கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்புகிறீர்கள், நிதி வசூலித்துக் கொடுக்கிறீர்கள், விரைவாக நடவடிக்கை எடுக்க முயலுகிறீர்கள். ஆனால் ஜெயலலிதா நீங்கள் பதவி விலக வேண்டுமென்று திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறாரே?


கருணாநிதி: என் மீதுள்ள பரிதாபம் தான் காரணம். இவ்வளவு கஷ்டப்படுகிறாரே என்பதற்காகத் தான் அவர் அப்படி கூறுகிறார்.


கேள்வி: மத்திய அரசு கடுமையாகச் செயல்பட வேண்டுமென்று சொல்லியிருக்கிறீர்கள். மத்திய அரசுக்கு தரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று சொல்லலாம் அல்லவா?


கருணாநிதி: இப்போதுள்ள மத்திய அரசிடம், அந்த அளவிற்கு மிரட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.


கேள்வி: இன்றைக்கு நடந்த கூட்டத்தில் பாமக கலந்து கொண்டுள்ளது. இது திமுக-பாமக இடையிலான பிணக்குத் தீர்வதற்கான வாய்ப்பை உருவாகியிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?. ஏனென்றால் அவர்களை கூட்டணியை விட்டு விலக்கினீர்களே?


கருணாநிதி: எங்களுக்குள் ஏதும் தகராறு ஏற்படவில்லை. விலக்கியதாகச் சொல்வதெல்லாம் தவறு. அப்படிக் கூறுவது அவமரியாதையான வார்த்தைகள். யாரையும் வெளியே போ என்று சொல்கிற அளவிற்கு நாகரிகமற்றவர்கள் அல்ல நாங்கள். எங்களுடைய வருத்தத்தைத் தெரிவித்து கொண்டோம். அவர்கள் தங்களுடைய நிலைமையை விளக்கினார்கள். அவ்வளவு தான்.


கேள்வி: இலங்கையிலே அதிபராக ராஜபக்சே இருக்கிற வரை பிரச்சினை தீராது என்று சிலர் சொல்வதைப் பற்றி...?


கருணாநிதி: அது நம் ஆற்றல், அறிவு, வைராக்கியம், தமிழர்களுடைய ஒற்றுமை ஆகியவற்றைப் பொறுத்தது.


கேள்வி: இலங்கையிலே தனி நாடு உருவாவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா?


கருணாநிதி: அதையெல்லாம் நான் யூகித்துச் சொல்ல முடியாது.

11/25/2008

இலங்கையில் போரை நிறுத்துமாறு கோரி இந்திய கம்யூனிஸ்ட்- ம.தி.மு.க. மறியல்




[செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2008, 03:19 பி.ப


இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதனை கண்டித்தும் அங்கு உடனடியாக போரை நிறுத்த மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் எனக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீதி மறியல் போராட்டம் நடத்தியுள்ளது.
சென்னை மத்திய தொடருந்து நிலையம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்த வீதி மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., புதிய தமிழகம், தேசிய வாத காங்கிரஸ் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டன.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியின் மத்தியில் அமர்ந்து மறியல் செய்தனர்.
"போர் நிறுத்தம் உடனே வேண்டும்"
"ஈழத்தமிழர்கள் உரிமை போர் வெல்லட்டும்"
"மத்திய அரசே சிறிலங்காவுக்கு ஆயுத உதவி செய்யாதே"
என முழக்கம் எழுப்பினர்.
மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்து தா.பாண்டியன் உரையாற்றிய போது தெரிவித்ததாவது:
இந்த போராட்டம் தமிழ்நாடு முழுவதும் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இதனை அங்கீகரித்து அனைத்து கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் இன்று நடத்துகிறார்.
இதுவரை அவர் எடுத்த முயற்சிக்கு மத்திய அரசில் இருந்து எந்த முடிவும் வரவில்லை. இன்று எடுக்கும் முடிவிலாவது நல்ல பலன் கிடைத்தால் நாம் பாராட்டுவோம்.
இலங்கை தமிழர்கள் மீது குண்டு மழை பொழியாதே என்று தான் கேட்கிறோம். சிங்களவர் மீது குண்டு போடு என்று சொல்லவில்லை. இலங்கையில் தமிழர்கள் மீது குண்டு போடுவது தொடந்தால் வேறு வழிகளில் எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த தயங்க மாட்டோம்.
முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சிக்கூட்டம் சட்டசபை கூட்டம் ஆகியவற்றில் போடப்பட்ட தீர்மானங்களுக்கு இதுவரை மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. தமிழ் மக்களை கொல்வதை தடுத்து நிறுத்துங்கள் என்று சொல்லியும் இதுவரை மத்திய அரசு கேட்கவில்லை. மத்தியில் 7 மந்திரிகள் இருக்கிறார்கள். இதுவரை எதுவும் பேசவில்லை.
இலங்கையில் கொல்லப்பட்டு வரும் தாய்மார்கள், குழந்தைகளை பாதுகாக்க போராடுகிறோம். போர் நிறுத்தம் வரும் வரை பல வடிவங்களில் தொடர்ந்து போராடுவோம்.
இன்று தமிழ்நாட்டில் மறியலில் ஈடுபட்டு தஞ்சை, மதுரை, தூத்துக்குடி, நெல்லை, கோவில்பட்டி உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கைதாகி உள்ளனர். இது தமிழக மக்களின் உணர்வுபூர்வமான கோரிக்கை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 7 கோடி தமிழர்களை மதிக்காத பிரதமரை இனியும் சந்தித்து கடிதம் கொடுப்பதை விரும்பவில்லை என்றார் அவர்.
இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட தா.பாண்டியன் உள்ளிட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் தேசியக் குழு உறுப்பினர் நல்லக்கண்ணு, மாநில துணை செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் துணைச் செயலாளர்களான ஏழுமலை, சம்பத் தியாகராஜன், கோபு, ஏ.ஐ.டி.யூ.சி, மாவட்ட செயலாளர்களான குப்பன், சண்முகவேலு, ம.தி.மு.க. துணை பொதுச் செயாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்களான வேளச்சேரி மணிமாறன், ஜீவன், ஷீமாபஷீர், பகுதி செயலாளர் சென்ட்ரல் நிஷார், வக்கீல் ஜெயகோபால், தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் திண்டிவனம் இராமமூர்த்தி, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பார்வர்ட் புளக் கதிரவன், மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் துரையரசன், தமிழ் தேசிய விடுதலை இயக்கம் பொதுச் செயலாளர் தியாகு, பெரியார் பொதுவுடமை கட்சி தமிழேந்தி, தமிழ் தேசிய இயக்க பொருளாளர் பத்மநாபன், தமிழ் படைப்பாளர் முன்னணி தலைவர் ஜெயப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கைதாகியுள்ளனர்.
இவர்களில் 50-க்கும் அதிகமான பெண்களும் இருந்தனர்.
கைதான அனைவரும் வால்டாக்ஸ் வீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை பிரச்சினை தொடர்பில் இந்தியப் பிரதமரை அனைத்து கட்சி தலைவர்களும் சந்திக்க முடிவு


[செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2008, 05:50


இலங்கை பிரச்சினை தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களும் அடுத்த மாதம் டிசம்பர் 4 ஆம் நாள் சந்திக்கவுள்ளனர்.
அனைத்து கட்சிக் கூட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி இன்று செவ்வாய்க்கிழமை கூட்டினார்.
இக்கூட்டத்தினை அ.தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய முக்கிய கட்சிகள் புறக்கணித்துள்ளன.
தி.மு.க.வின் சார்பில் அமைச்சர்களான பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற கட்சித் தலைவர் டி.சுதர்சனம், துணைத் தலைவர் டி.யசோதா, பா.ம.க. சார்பில் அதன் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே. மணி, விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தலைவர் காதர் மொய்தீன், சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாசித், புரட்சி பாரதம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் பின்வருமாறு:
“இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்திட, அங்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், 50 லட்சத்திற்கும் அதிகமான இலங்கை தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு உரிய பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்றும், இந்தியப் பேரரசு தனது செல்வாக்கை பயன்படுத்தி சிறிலங்கா அரசை போர் நிறுத்தத்திற்கு இணங்க வைத்து, தமிழர் பகுதிகளில் நிலையான அமைதியும், சகவாழ்வும் ஏற்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவரும் ஒரே குரலாக இல்லாவிட்டாலும் தங்கள் தங்களால் இயன்ற அளவுக்கு தனித்தனியாகவும், ஒரு சிலர் இணைந்தும் போர்க்குரல் கொடுத்து வருகின்றனர்.
இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து 23.04.08 அன்றும், 12.11.08 அன்றும் இரண்டு முறை தமிழ்நாடு சட்ட சபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு முறையாக அனுப்பி வைத்திருக்கின்றோம்.
14.10.08 அன்று அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அதனையும் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம்.
இதுவரை எங்கும் நடைபெறாத அளவுக்கு 24.10.08 அன்று வரலாறு காணாத மனித சங்கிலி ஒன்றினை நடத்தி காட்டியிருக்கின்றோம். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங்களும் - அரசியல் சார்பற்ற அமைப்புக்களும் - ஆர்ப்பாட்டங்களையும் மறியல்களையும் தொடருந்து நிறுத்தம் போன்ற போராட்டங்களையும் செய்து தங்கள் எதிர்ப்பினை தெரிவித்திருக்கின்றன.
திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள், சின்னத்திரையைச் சேர்ந்தவர்கள் அனைவருமே பேரணி நடத்தி, உண்ணாநிலை நடத்தி இலங்கைத் தமிழரின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டுமென்று சொல்லியிருக்கின்றனர்.
வாழ்வாதாரம் தேடி கடலுக்கு மீன் பிடித்திடச் செல்லும் தமிழக மீனவர்களின் துயரம் களையப்பட வேண்டும் என்றும் அவர்களை சிறிலங்கா கடற்படையினர் சிறை பிடித்து செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.
அவதியுறும் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசின் சார்பாகவும் நிவாரண உதவிகள் அனுப்புவதற்காக நிதியுதவி கோரி தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று இதுவரை 37 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒரு மாத காலத்திற்குள்ளாகவே சேர்ந்துள்ளது.
நாம் எடுத்த இந்த முயற்சிகளின் பயனாகவும், மத்திய அரசு எடுத்துக்கொண்ட அக்கறையின் காரணமாகவும் போரினால் வீடு வாசல்களை இழந்து சொந்த நாட்டிற்குள்ளேயே அகதிகளாக ஆக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு இடர் உதவி பொருட்களை செஞ்சிலுவைச் சங்க அமைப்புக்களின் மூலமாகவும் சிறிலங்காவில் உள்ள இந்திய தூதுவர் வழியாகவும் நம்மால் அனுப்பி வைக்க முடிந்திருக்கின்றது.
அது போலவே மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு சிறிலங்கா அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக மீனவர்களை சுடக்கூடாது என்று உடன்பாடு காண முடிந்துள்ளது.
எனினும், தமிழகத்தில் உள்ள தமிழர்களும் உலகத் தமிழர்களும் நாளும் விரும்புகின்ற போர் நிறுத்தம் இலங்கையில் இதுவரையில் கைகூடவில்லை. நாம் கேட்டுக்கொண்டவாறு, போர் நிறுத்தம் செய்வதற்கு தயார் என்று ஒரு தரப்பினர் அறிவித்த பிறகும் சிறிலங்கா அரசு போரை நிறுத்த மாட்டேன் என்று அடம்பிடிப்பதோடு இரண்டொரு நாட்களில் இலங்கை தமிழர்களை எல்லாம் கொன்றொழிப்பேன் என்று கண்ணை மூடிக்கொண்டு வெறித்தாக்குதல் நடத்தும் செய்தி அன்றாடம் ஏடுகளில் வந்து கொண்டிருக்கின்றது.
இலங்கை தமிழர்கள் பெரும் பகுதியினராக வாழ்கின்ற பகுதிகளை முற்றிலுமாக பிடிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என்று சிறிலங்கா சிங்கள அரசு தொடர்ந்து நடத்தி வரும் போரில் பெருமளவில் அப்பாவி தமிழர்களும் அவர்தம் குழந்தைகளும் தான் கொல்லப்படுகின்றனர் என்றும் பெரும்பாலோனோர் அகதிகளாக்கப்பட்டு அல்லற்படுகின்றனர் என்றும் துயரச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
பள்ளிகளுக்கு செல்லும் வயதுடைய பல்லாயிரக்கணக்கான தமிழ் சிறார்கள் பல மாதங்களாக கல்விக்கூடங்களுக்கே செல்ல முடியாத நிலையில் காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் அடைக்கலம் புகுந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொண்டால் போதும் என்று திரிந்து கொண்டிருக்கின்றனர் என்றும் செய்திகள் வருகின்றன.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் வருகின்ற செய்திகள் நம்மைப் பொறுமையாக இருக்க விடாத நிலையில் இனி என்ன செய்வது என்று யோசித்ததில் மத்திய அரசு, சிறிலங்கா அரசுடன் மேலும் மேலும் வேண்டுகோள் என்ற அளவில் நில்லாது, போர் நிறுத்தம் உடனடியாக அறிவிக்கப்பட கடுமையான குரல் கொடுத்து எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று அனைத்து கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகின்றது.
மத்திய அரசு தன்னால் இயன்றளவிற்கு குரல் கொடுத்து வருகின்றது என்பதை தமிழகம் உணர்ந்த போதிலும் சிறிலங்கா அரசு அதனை மதிக்காத நிலையில் இந்திய அரசு இலங்கை தமிழர்களின் பிரச்சினையில் மேலும் வேகத்தை காட்ட வேண்டும் என்று இந்த கூட்டம் வலியுறுத்துகின்றது.
இந்த தீர்மானத்தை வலியுறுத்தும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சித் தலைவர்கள் தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலைமையில் டிசம்பர் 4 ஆம் நாள் டெல்லியில் பிரதமர் அவர்களை சந்திப்பது என்றும் அதற்கிடையே நவம்பர் 28 ஆம் நாள் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரை சந்திப்பது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கின்றது”.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

11/24/2008

இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதே பெரும் சாதனை



- கலைஞர் கருணாநிதி
திகதி: 24.11.2008











"எனது எல்லா சாதனைகளையும் விட, இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதையே பெரும் சாதனையாகக் கருதுகிறேன்'' என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். சென்னை சாந்தோம் கலைத் தொடர்பு நிலையம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு ""வாழ்நாள் சாதனையாளர்'' விருது வழங்கும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கலை, இலக்கியம், சினிமா, பத்திரிகை ஆகிய ஊடகங்களின் வழியாக அவர் ஆற்றிவரும் பணியைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. விருதினைப் பெற்றுக்கொண்டு கருணா நிதி ஆற்றிய ஏற்புரை: "இலங்கையில் நம் தமிழ்ச் சகோதரர்கள் தினம் தினம் கொல்லப்படுவது தொடர்கிறது. அந்தப் படுகொலையை தடுத்து நிறுத்த இயலாத பரிதாப நிலையில் உள்ளோம். இந்தச் சூழலில் நான் இந்த விருதினைப் பெறுவது மகிழ்ச்சிக்குரியது அல்ல. எனது சாதனைகளைப் பாராட்டி இந்த விருது வழங்குவதாகக் கூறுகிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு ஓர் அமைதியான வாழ்வினை ஏற்படுத்தித் தர முடிந்தால் அதையே எனது பெரும் சாதனையாகக் கருதுவேன்.
விழாவுக்கு அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் ஸ்தனிஸ்லாஸ் ஃபெர்னாண்டோ தலைமை வகித்து, விருதினை வழங்கினார். பத்திரிகை சேவையைப் பாராட்டி "இந்து' நாளிதழ் ஆசிரியர் என்.ராமுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழக சட்டப் பேரவை கொங்கிரஸ் கட்சி ""கொறடா'' பீட்டர் அல்போன்ஸ் வாழ்த்திப் பேசினார். விழாவில், பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், மத்திய, மாநில அமைச்சர்கள், தமிழக ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் பீட்டர் பெர்னாண்டோ, திருச்சி ஆயர் டோனிடி வோட்டா, சாந்தோம் கலைத்தொடர்பு நிலைய இயக்குநர் வின்சென்ட் சின்னதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக 10 இலட்சம் ரூபா முதல்வரிடம் வழங்கப்பட்டது

11/23/2008

திருவாரூரில் ரணில் கார் மறிப்பு-சிபிஐ



வியாழக்கிழமை, நவம்பர் 20, 2008

திருவாரூர் வந்த முன்னாள் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் காரை நூற்றுக்கணக்கான இந்திய கம்யூனிஸ்ட் தொண்டர்கள் வழி மறித்து கொரா செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இன்று காலை சென்னை வந்த அவர் விமானம் முலம் திருச்சி சென்றார். அங்கிருந்து திருவாரூர் சனீஸ்வர பகவான் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டார்.பின்னர் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னும் ஏராளமான போலீஸ் வாகனங்கள் சென்றன.இந்த வாகன அணி வகுப்பு திருவாரூர் வந்தபோது திருக்கொல்லிக்காடு என்ற இடத்தில் அதை நூற்றுக்கணக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் கறுப்புக் கொடிகளுடன் வழி மறித்தனர்.இலங்கையில் போர் நிறுத்தம் சாத்தியமில்லை என்று கருத்து தெரிவித்த ரணிலுக்கு எதிராக கோஷமிட்ட தொண்டர்கள், அவரது காரை சுற்றி வளைத்தனர்.அவர்களை போலீசாரால் அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.இதையடுத்து கூடுதல் போலீசார் விரைந்து வந்து 30 நிமிடஙகள் போராடி சிபிஐ தொண்டர்களை அப்புறப்படுத்தி ரணில் கார் செல்ல வழி ஏற்படுத்தினர்.இந்த சம்பவம் தொடர்பாக 49 சிபிஐ தொண்டர்களையும் அந்தக் கட்சியி்ன் பஞ்சாயத்துத் தலைவர் பாண்டியனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.பின்னர் ரணில் மதுரை புறப்பட்டுச் சென்றார். மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய பின் விமானம் சென்னை திரும்பும் ரணில் பின்னர் கொழும்பு செல்கிறார்.போர் நிறுத்தம் சரிவராது: ரணில்முன்னதாக சென்னை வந்த ரணில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரணில், டெல்லியில் சமீபத்தில் பிரணாப் முகர்ஜியுடன் விரிவாகப் பேசினேன். அவர் இந்தப் பிரச்சினையை சிறப்பாக கையாண்டு வருகிறார்.அதேபோல, பாஜக தலைவர் அத்வானி, சிபிஎம் தலைவர்கள் ஆகியோரையும் சந்தித்துப் பேசினேன்.2005ம் ஆண்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த நிலையில் மீனவர்கள் பிரச்சினை அவ்வப்போது தலை தூக்கி வருவது வருத்தம் தருகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினை குறித்து விரிவாக பேச நான் விரும்பவில்லை. இதனால் அடுத்த நாட்டின் விவகாரத்தில் நான் தலையிடுவதாக அமைந்த விடும்.வன்னியில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, உடைகள், இருக்க இடம் ஆகியவை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.தமிழர் தேசிய கட்சிகளும், முஸ்லீம் கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைத்து இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பேச்சு நடத்தி, இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும்.அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியதான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும்.தற்போது இலங்கையில் உள்ள நிலையைக் கருத்தில் கொள்ளும்போது போர் நிறுத்தம் சாத்தியமல்ல என்றே தோன்றுகிறது. போர் நிறுத்தம் சரிப்பட்டு வராது என்றே நான் கருதுகிறேன்.எனது இந்திய பயணத்தின்போது நான் சந்தித்த தலைவர்களிடமும் இதைத் தெரிவித்துள்ளேன்.போர் நிறுத்தத்தால் தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் வந்து விடாது. அரசியல் தீர்வு ஒன்றே பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி என்றார் அவர்.அவரது இந்தக் கருத்தைக் கண்டித்து தான் சிபிஐ தொண்டர்கள் அவரது காரை வழிமறித்தனர்.

இலங்கையில் போரை நிறுத்துறுமாறு வலியுறுத்தி வைகோ உண்ணாநிலை போராட்டம்


[புதன்கிழமை, 19 நவம்பர் 2008, 07:47 பி.ப ஈழம்] [க.நித்தியா]

இலங்கையில் போரை நிறுத்துமாறு கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பாக இன்று புதன்கிழமை உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.

உண்ணாநிலை போராட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். போராட்டத்தினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் தொடக்கி வைத்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சோ்ந்த சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னசாமி, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், நடிகர் மணிவண்ணன், ஓவியர் புகழேந்தி உள்ளிட்டோர் வைகோவை வாழ்த்தி உரையாற்றினர்.

இதில் தா.பாண்டியன் உரையாற்றிய போது கூறியதாவது:
இலங்கை பிரச்சினையில் ஒட்டுமொத்த தமிழர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இலங்கை தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள கடைசி தமிழன் இருக்கும் வரை மகிந்த ராஜபக்சவின் கனவு நிறைவேறாது. 25 ஆம் நாள் நடைபெறும் மறியல் போராட்டத்துக்கு (முழு அடைப்பு பின்னர் மறியல் போராட்டமாக மாற்றப்பட்டுள்ளது) பிறகு போர் நிறுத்தப்படா விட்டால் அடுத்தகட்ட போராட்டம் பற்றி அனைவரும் பேசி முடிவு செய்வோம் என்றார்.
உண்ணாநிலை போராட்டத்தின் போது ஊடகவியலாளர்களிடம் வைகோ தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராபஜபக்ச டில்லியில் போரை நிறுத்த முடியாது என்று கொக்கரித்து இருக்கிறார். சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டும் 7 கோடி தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை. போர் தீவிரமடையும் என்று தைரியமாக ராஜபக்ச அறிவிக்கிறார். இதற்கு மத்திய அரசுதான் காரணம்.

இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு வலியுறுத்தவில்லை. இலங்கை தமிழர்களுக்காக நிதி திரட்டுவது, உணவுப் பொருட்கள் வழங்குவது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல் ஆகியன நாடகமாகும்.

இலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசு தான். ஆயுதங்களை வழங்கி விடுதலைப் புலிகளை அழித்து வருகிறது. இதன் மூலம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகின்றனர்.
மத்திய அரசு போரை நிறுத்த சொன்னால் போர் நிறுத்தப்படும். ஆனால் அதனை செய்ய மத்திய அரசு தயங்குகிறது. போரை நிறுத்தாவிட்டால் பொருளாதார தடை விதிக்க வேண்டும். மத்திய அரசுக்கு எதிராக தமிழக மக்களை ஒன்று திரட்டி வருகிறோம். தமிழக மக்களை ஏமாற்ற நினைத்தால் அது நடக்காது.

இந்த போரில் சிறிலங்கா அரசு வெற்றி பெற முடியாது. எல்லா தாக்குதலையும் அவர்கள் எதிர்கொள்ளக் கூடியவர்கள். எந்த இழப்பையும் ஈடுகட்டி வெற்றி பெறக் கூடியவர்கள்.
இலங்கையில் போரை நிறுத்த சொல்லி மத்திய அரசுக்கு முதலமைச்சர் அரசியல் அழுத்தம் கொடுக்கவில்லை. அதனால் இந்த பிரச்சினை நீடித்து வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் மறியல் போராட்டத்தில் ம.தி.மு.க. இணைந்து போராடும்.
ஆயுதம் ஏந்தி போராட சொன்னால் அது இராஜ துரோகமா? திரும்ப திரும்ப சொல்கிறேன். அது தவறு இல்லை என்றார் அவர்.

ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் ஜீவன், மணிமாறன், சோமு, ராஜா, உதயகுமார், பத்மநாபன் மற்றும் கவிஞர் முத்துலிங்கம், மகளிர் அணி குமாரி விஜயகுமார், செங்குட்டுவன், தேவதாஸ், ராதாகிருஷ்ணன், நன்மாறன் உட்ட ஏராளமானோர் உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்றனர்.



Posted by Picasa

'ராஜிவ் கொலையை வைத்து தமிழ் உணர்வுகளை அழிப்பதா

நவம்பர் 19, 2008

சென்னை:
ராஜிவ் காந்தி கொலையை வைத்து தமிழ் உணர்வுகளை அழித்து விட முடியாது என தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பான முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் ஈழத் தமிழர்களை காப்பாற்றக் கோரியும் இலங்கையில் போரை நிறுத்தக் கோரியும் பேரணி நடைபெற்றது. பேரணியை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தொடங்கி வைத்தார்.மன்றோ சிலை அருகே தொடங்கிய பேரணி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் முடிவடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.எங்களை அழித்துக் கொள்வோம்-வீரமணி:பேரணியை தொடங்கி வைத்து வீரமணி பேசுகையில், நமக்கு ஒரே இலக்குதான் இலங்கையில் யுத்த நிறுத்தம் செய்ய வேண்டும். தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் எங்களையும் அழித்துக் கொள்ள தயங்க மாட்டோம்.ராஜிவ் காந்தி கொலையை வைத்து தமிழ் உணர்வுகளை அழித்து விட முடியாது. இலங்கை ராணுவத்தால் இறுதி வெற்றி பெற முடியாது என்றார்.சுண்டைக்காய் நாட்டின் தைரியம்-ராமதாஸ்:பேரணியின் முடிவில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உரையாற்றினார். அவர் கூறியதாவது:அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி போரை நிறுத்துவோம் என்று தீர்மானம் கொண்டு வந்தோம். தொடர்ந்து தமிழக முதல்வர் எடுத்த முயற்சிகள், எடுக்கின்ற முயற்சிகளுக்கு பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் ஆதரவு கொடுத்து கொண்டிருக்கிறோம்.யோசனைகளையும் சொல்லி வருகிறோம். பிரதமர் போரை நிறுத்த வேண்டும் என்று சொன்ன நிலையிலே, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அழுத்தம் திருத்தமாக போரை நிறுத்த வேண்டும் என்று சொன்ன நிலையிலே, ராஜபக்சே கேட்கவில்லை. அவர் இந்தியாவை மதிக்கவில்லை என்று தான் அர்த்தம்.ஒரு சுண்டைக்காய் நாடு. இந்தியா வளர்ந்து வருகிற வல்லரசு என்று மற்ற நாடுகள் நினைத்து கொண்டிருக்கிறபோது இந்த சுண்டைக்காய் நாடு எந்த தைரியத்திலே அப்படி சொல்கிறது.தமிழர்கள் எரிமலையாக கொதித்து போய் இருக்கிறார்கள். போரை நிறுத்த முடியாது என்று சொல்லிவிட்டார் ராஜபக்சே. அடுத்து என்ன செய்ய போகிறோம்.ஆறே கால் கோடி தமிழர்களுக்கு தலைமை தாங்குகின்ற முதல்வர் கலைஞரின் வேண்டுகோளையும், சிங்களவன் நிராகரித்து விட்டான்.ஏற்க மறுத்துவிட்டான் என்கிற போது மாற்று வழி என்ன என்பதை நாம் யோசிக்க வேண்டும். இதில் நானும், திருமாவளவன் மட்டும் யோசித்தால் போதாது. ஒன்று கூடி, தமிழக முதல்வர் தலைமையிலே ஒன்று கூடி அடுத்து என்ன என்பதை நாம் அவர் தலைமையிலே யோசிக்க வேண்டும்.அவரை முன்னிறுத்தி யோசிக்க வேண்டும். அவர் பின்னால் நின்று போராடுவதற்கு நம்மை தயார்படுத்த வேண்டும்.இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டோம் என்ற நிலை உருவாக வேண்டும். தனித்து கூட்டம் போடுங்கள். ஆனால் தனித்து முடிவு எடுக்காதீர்கள். மாறுபாடாக கருத்து சொல்கிறேன் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம்.அந்த வகையில் அடுத்து இந்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற வேண்டுகோளை நான் வழிமொழிகிறேன் என்றார் ராமதாஸ்.பேரணியில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், நடிகர் மன்சூர் அலிகான், இயக்குனர் வி.சி.குகநாதன், ஓவியர் வீரசந்தானம் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தமிழ் பேசும் 'பாவத்திற்காக' அழிக்கிறார்கள்-கனிமொழி



புதன்கிழமை, நவம்பர் 19, 2008

சென்னை:


இலங்கையில் நடப்பது என்ன? என்று மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காக தமிழ்நாடு முழுவதும் மாணவர் கூட்டமைப்பு சார்பில் வேன் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த சுற்றுப்பயணத்தை கவிஞர் கனிமொழி எம்.பி. கறுப்பு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.விடுதலைச் சிறுத்தைகளின் மாணவர் பிரிவான தமிழக மாணவர் கூட்டமைப்பின் சார்பில், இலங்கையில் நடப்பது என்ன? என்பதை மக்களுக்கு விளக்கும் வகையில் மாணவர்கள் வேன் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.கூட்டமைப்பின் தலைவர் எழிலன் தலைமையில் 15 மாணவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர்.அந்த வேனின் இருபுறங்களிலும் இலங்கையில் நடக்கும் இனப் படுகொலையைச் சித்தரிக்கும் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.14 நாட்கள் நடக்கும் இந்த பிரச்சார பயணத்தை திமுக எம்பி கனிமொழி கறுப்பு கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,நம் நாடு நிலவுக்கு செயற்கைகோள் அனுப்பியதைப் பெருமையாகப் பேசுகிறோம். அதே நேரத்தில் ஈழத்தின் உண்மை நிலை என்ன என்று நம்மால் முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியவில்லை.பத்திரிகைகள், ஊடகங்கள் அந்த நாட்டு அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் வெளியிடுகின்றன.இலங்கையில் பள்ளிக்குப் போக வேண்டிய குழந்தைகள் பதுங்கு குழியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.போர் அறிவிப்பு செய்த பிறகு, பாதிரியார் ஒருவரை அவர் தங்கியிருக்கும் இடத்தை விட்டு செல்லுமாறு அரசு ஆணையிட்டது. அதையடுத்து அந்தப் பாதிரியாரும் மூட்டை, முடிச்சுகளை கட்டிக் கொண்டு போக புறப்பட்டார். அப்போது இரண்டு குழந்தைகள் அங்கு வந்தனர். அவர்களிடம் எனது ஞாபகமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி பாதிரியார் 2 பேனாக்களைக் கொடுத்தார்.அந்தப் பேனாவை பெற்றுக் கொண்ட அந்தக் குழந்தைகள் பாதிரியாரிடமே அவற்றைத் திருப்பிக் கொடுத்தன. நாங்கள் உயிருடன் இருப்போமா அல்லது இருக்க மாட்டோமா என்று தெரியவில்லை. எனவே, வேறு ஊரில் உள்ள குழந்தைகளுக்கு இந்தப் பேனாவைக் கொண்டு போய் கொடுங்கள் என்று அந்தக் குழந்தைகள் கூறியுள்ளனர்.எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான குழந்தைகளின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை. இப்படியொரு நிலையை ஏற்படுத்தியிருக்கும் நாடு ஒரு நாடா?.தன் மக்களையே அழிக்கும் அநாகரீகத்தை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு குரல் கொடுக்க வேண்டும். தமிழ் பேசும் பாவத்திற்காக அவர்களை அழிக்கிறார்கள். தமிழர்கள் என்பதற்காக இல்லாவிட்டாலும் அவர்களும் மனிதர்கள் என்பதற்காகவாவது குரல் கொடுக்க வேண்டும் என்றார் கனிமொழி.இந்த நிகழ்ச்சியி்ல் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோரும் பங்கேற்றனர்.மதிமுக உண்ணாவிரதம்:இதற்கிடையே இலங்கியில் போரை மத்திய அரசு உடனே தடுத்து நிறுத்தக் கோரி மதிமுக சார்பில் இன்று கரூரில் உண்ணாவிரதம் நடைபெற்றது.கரூர் தாலுகா அலுவலகம் முன் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பொறுப்புக் குழுத் தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார்.இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நாம் எந்த நாட்டிற்கும் எதிரானவர்கள் அல்ல; உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; நாம் இந்தியாவின் நண்பர்கள்: தேசியத் தலைவர்

காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.