11/25/2008

இலங்கையில் போரை நிறுத்துமாறு கோரி இந்திய கம்யூனிஸ்ட்- ம.தி.மு.க. மறியல்




[செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2008, 03:19 பி.ப


இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதனை கண்டித்தும் அங்கு உடனடியாக போரை நிறுத்த மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் எனக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீதி மறியல் போராட்டம் நடத்தியுள்ளது.
சென்னை மத்திய தொடருந்து நிலையம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்த வீதி மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., புதிய தமிழகம், தேசிய வாத காங்கிரஸ் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டன.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியின் மத்தியில் அமர்ந்து மறியல் செய்தனர்.
"போர் நிறுத்தம் உடனே வேண்டும்"
"ஈழத்தமிழர்கள் உரிமை போர் வெல்லட்டும்"
"மத்திய அரசே சிறிலங்காவுக்கு ஆயுத உதவி செய்யாதே"
என முழக்கம் எழுப்பினர்.
மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்து தா.பாண்டியன் உரையாற்றிய போது தெரிவித்ததாவது:
இந்த போராட்டம் தமிழ்நாடு முழுவதும் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இதனை அங்கீகரித்து அனைத்து கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் இன்று நடத்துகிறார்.
இதுவரை அவர் எடுத்த முயற்சிக்கு மத்திய அரசில் இருந்து எந்த முடிவும் வரவில்லை. இன்று எடுக்கும் முடிவிலாவது நல்ல பலன் கிடைத்தால் நாம் பாராட்டுவோம்.
இலங்கை தமிழர்கள் மீது குண்டு மழை பொழியாதே என்று தான் கேட்கிறோம். சிங்களவர் மீது குண்டு போடு என்று சொல்லவில்லை. இலங்கையில் தமிழர்கள் மீது குண்டு போடுவது தொடந்தால் வேறு வழிகளில் எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த தயங்க மாட்டோம்.
முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சிக்கூட்டம் சட்டசபை கூட்டம் ஆகியவற்றில் போடப்பட்ட தீர்மானங்களுக்கு இதுவரை மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. தமிழ் மக்களை கொல்வதை தடுத்து நிறுத்துங்கள் என்று சொல்லியும் இதுவரை மத்திய அரசு கேட்கவில்லை. மத்தியில் 7 மந்திரிகள் இருக்கிறார்கள். இதுவரை எதுவும் பேசவில்லை.
இலங்கையில் கொல்லப்பட்டு வரும் தாய்மார்கள், குழந்தைகளை பாதுகாக்க போராடுகிறோம். போர் நிறுத்தம் வரும் வரை பல வடிவங்களில் தொடர்ந்து போராடுவோம்.
இன்று தமிழ்நாட்டில் மறியலில் ஈடுபட்டு தஞ்சை, மதுரை, தூத்துக்குடி, நெல்லை, கோவில்பட்டி உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கைதாகி உள்ளனர். இது தமிழக மக்களின் உணர்வுபூர்வமான கோரிக்கை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 7 கோடி தமிழர்களை மதிக்காத பிரதமரை இனியும் சந்தித்து கடிதம் கொடுப்பதை விரும்பவில்லை என்றார் அவர்.
இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட தா.பாண்டியன் உள்ளிட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் தேசியக் குழு உறுப்பினர் நல்லக்கண்ணு, மாநில துணை செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் துணைச் செயலாளர்களான ஏழுமலை, சம்பத் தியாகராஜன், கோபு, ஏ.ஐ.டி.யூ.சி, மாவட்ட செயலாளர்களான குப்பன், சண்முகவேலு, ம.தி.மு.க. துணை பொதுச் செயாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்களான வேளச்சேரி மணிமாறன், ஜீவன், ஷீமாபஷீர், பகுதி செயலாளர் சென்ட்ரல் நிஷார், வக்கீல் ஜெயகோபால், தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் திண்டிவனம் இராமமூர்த்தி, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பார்வர்ட் புளக் கதிரவன், மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் துரையரசன், தமிழ் தேசிய விடுதலை இயக்கம் பொதுச் செயலாளர் தியாகு, பெரியார் பொதுவுடமை கட்சி தமிழேந்தி, தமிழ் தேசிய இயக்க பொருளாளர் பத்மநாபன், தமிழ் படைப்பாளர் முன்னணி தலைவர் ஜெயப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கைதாகியுள்ளனர்.
இவர்களில் 50-க்கும் அதிகமான பெண்களும் இருந்தனர்.
கைதான அனைவரும் வால்டாக்ஸ் வீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

0 comments:

நாம் எந்த நாட்டிற்கும் எதிரானவர்கள் அல்ல; உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; நாம் இந்தியாவின் நண்பர்கள்: தேசியத் தலைவர்

காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.