[புதன்கிழமை, 19 நவம்பர் 2008, 07:47 பி.ப ஈழம்] [க.நித்தியா]
இலங்கையில் போரை நிறுத்துமாறு கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பாக இன்று புதன்கிழமை உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.
உண்ணாநிலை போராட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். போராட்டத்தினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் தொடக்கி வைத்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சோ்ந்த சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னசாமி, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், நடிகர் மணிவண்ணன், ஓவியர் புகழேந்தி உள்ளிட்டோர் வைகோவை வாழ்த்தி உரையாற்றினர்.
இதில் தா.பாண்டியன் உரையாற்றிய போது கூறியதாவது:
இலங்கை பிரச்சினையில் ஒட்டுமொத்த தமிழர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இலங்கை தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள கடைசி தமிழன் இருக்கும் வரை மகிந்த ராஜபக்சவின் கனவு நிறைவேறாது. 25 ஆம் நாள் நடைபெறும் மறியல் போராட்டத்துக்கு (முழு அடைப்பு பின்னர் மறியல் போராட்டமாக மாற்றப்பட்டுள்ளது) பிறகு போர் நிறுத்தப்படா விட்டால் அடுத்தகட்ட போராட்டம் பற்றி அனைவரும் பேசி முடிவு செய்வோம் என்றார்.
உண்ணாநிலை போராட்டத்தின் போது ஊடகவியலாளர்களிடம் வைகோ தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராபஜபக்ச டில்லியில் போரை நிறுத்த முடியாது என்று கொக்கரித்து இருக்கிறார். சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டும் 7 கோடி தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை. போர் தீவிரமடையும் என்று தைரியமாக ராஜபக்ச அறிவிக்கிறார். இதற்கு மத்திய அரசுதான் காரணம்.
இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு வலியுறுத்தவில்லை. இலங்கை தமிழர்களுக்காக நிதி திரட்டுவது, உணவுப் பொருட்கள் வழங்குவது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல் ஆகியன நாடகமாகும்.
இலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசு தான். ஆயுதங்களை வழங்கி விடுதலைப் புலிகளை அழித்து வருகிறது. இதன் மூலம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகின்றனர்.
மத்திய அரசு போரை நிறுத்த சொன்னால் போர் நிறுத்தப்படும். ஆனால் அதனை செய்ய மத்திய அரசு தயங்குகிறது. போரை நிறுத்தாவிட்டால் பொருளாதார தடை விதிக்க வேண்டும். மத்திய அரசுக்கு எதிராக தமிழக மக்களை ஒன்று திரட்டி வருகிறோம். தமிழக மக்களை ஏமாற்ற நினைத்தால் அது நடக்காது.
இந்த போரில் சிறிலங்கா அரசு வெற்றி பெற முடியாது. எல்லா தாக்குதலையும் அவர்கள் எதிர்கொள்ளக் கூடியவர்கள். எந்த இழப்பையும் ஈடுகட்டி வெற்றி பெறக் கூடியவர்கள்.
இலங்கையில் போரை நிறுத்த சொல்லி மத்திய அரசுக்கு முதலமைச்சர் அரசியல் அழுத்தம் கொடுக்கவில்லை. அதனால் இந்த பிரச்சினை நீடித்து வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் மறியல் போராட்டத்தில் ம.தி.மு.க. இணைந்து போராடும்.
ஆயுதம் ஏந்தி போராட சொன்னால் அது இராஜ துரோகமா? திரும்ப திரும்ப சொல்கிறேன். அது தவறு இல்லை என்றார் அவர்.
0 comments:
Post a Comment