செவ்வாய்க்கிழமை, நவம்பர் 25, 2008
மீனவர்கள் சுடப்பட்டு வந்த சம்பவங்கள் நின்றிருக்கின்றன. பட்டினி கிடக்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, உடை, மருந்து போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்பது தான் வேதனை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.இலங்கை விவகாரம் தொடர்பாக சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
மீனவர்கள் சுடப்பட்டு வந்த சம்பவங்கள் நின்றிருக்கின்றன. பட்டினி கிடக்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, உடை, மருந்து போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்பது தான் வேதனை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.இலங்கை விவகாரம் தொடர்பாக சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாத கட்சிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள், அவர்களுக்கு இந்தப் பிரச்சனையில் அக்கறை இல்லையா?கருணாநிதி: அப்படியெல்லாம் சொல்லமாட்டேன். அவர்கள் வராதது பற்றி உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
கேள்வி: ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி யிருக்கிறார்களே?
கருணாநிதி:அதைப்பற்றியெல்லாம் விமர்சிக்க விரும்பவில்லை.
கேள்வி: இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?
கருணாநிதி: தீர்மானத்தில் விவரமாகச் சொல்லியிருக்கிறோம். மீண்டும் நேரிலும் சந்திக்கவிருக்கிறோம். வரும் 28ம் தேதியன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரைச் சந்திப்பது என்று இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு டிசம்பர் 4ம் தேதி என் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமரைச் சந்திப்பது என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
கேள்வி: இலங்கையில் போரையே இந்திய அரசு தான் நடத்துகிறது என்று வைகோ பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறாரே?. இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்களையெல்லாம் கொடுத்து போரையே மறைமுகமாக இந்திய அரசு தான் நடத்துகிறது என்கிறாரே?
கருணாநிதி: இதற்கு இந்திய அரசு பதில் சொல்லும்.
கேள்வி: இலங்கை அகதிகளையெல்லாம் தமிழகத்திலிருந்து விரட்டுவதாக தா.பாண்டியன் மீண்டும் குற்றம் சாட்டியிருக்கிறாரே?
கருணாநிதி: அது தவறான, பொய்யான தகவல். பீதியை கிளப்புகின்ற தகவல். அந்தச் செய்தியைப் பரப்பியவர் தோழர் தா. பாண்டியன். நேற்றையதினம் அதற்கு அரசு சார்பில் ஒரு மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த மறுப்புக்கு மறுப்பாக, இன்றைக்கு அவர்களுடைய பத்திரிகையில் முதல் பக்கத்தில் கட்டம் கட்டி ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள்.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வசந்தன் என்பவருக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை அந்தப் பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார்கள். தனிப்பட்ட ஒருவரை வெளியேற்றுவது சம்மந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை, இலங்கை அகதிகள் அனைவருக்கும் அனுப்பப்பட்டதாகச் சொல்லியிருப்பது தவறான கூற்று. அவர்களுடைய ஜனசக்தி பத்திரிகையில் நான் சொன்னது தவறு என்று கட்டம் கட்டி செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.இன்று விடியற்காலை 5 மணிக்கு அதை நான் படித்துப் பார்த்து விட்டு, உடனடியாக நீலகிரி மாவட்டத்தினுடைய எஸ்பிக்கு போன் செய்து, விரிவான தகவல் கேட்டபோது, அவர் சொன்ன விளக்கம்- வசந்தன் என்பவர் எல்.டி.டி.ஈ. இயக்கத்திற்குள்ளேயே முரண்பாடு கொண்ட கருணா குழுவினருக்கு துணையாக இருந்து அந்தப் பகுதியிலே ஏராளமான பணத்தை வசூலித்து செலவு செய்து வந்தார் என்றும், அவருடைய நடவடிக்கைகள் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிப்பதாக இருந்ததால், அவருடைய பதிவை ரத்து செய்து, அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு க்யூ பிரிவு கண்காணிப்பாளரிடமிருந்து அறிவுரை வந்தது என்றும், அதையொட்டித் தான் அவரை வெளியேறுமாறு, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது என்றும் கூறினார். இந்த நோட்டீஸ் அவர் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வேறு எவருக்கும் வழங்கப்படவில்லை.நீலகிரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 281 இலங்கை அகதிகளும், சுமார் ஒரு லட்சம் தாயகம் திரும்பிய இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களும் வசித்து வருகிறார்கள். இவர்கள் எவருக்கும் இவ்வகையான நோட்டீஸ் எதுவும் வழங்கப்படவில்லை.
கேள்வி: அனைத்துக் கட்சித் தலைவர்களையெல்லாம் பிரதமரைச் சந்திக்க டெல்லிக்கு அழைத்துப் போகப் போவதாக சொல்லியிருக்கிறீர்கள். இன்றைய கூட்டத்திற்கு வராத கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுமா?
கருணாநிதி: எல்லோரையும் அழைப்பேன். இன்றைய கூட்டத்திற்கு வரவில்லை என்பதற்காக நான் யாரிடமும் கோபித்துக் கொண்டு அழைப்பு அனுப்பாமல் இருக்க மாட்டேன்.
கேள்வி: இன்றைய கூட்டத்திற்கே வராத கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், தலைவர்களும் நீங்கள் பிரதமரை சந்திக்கச் செல்லும்போது வருவார்களா?
கருணாநிதி: நான் எதிர்பார்ப்பது தவறல்ல.
கேள்வி: இங்கிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் முறையாகத் தமிழர்களுக்குக் கிடைக்காமல் ராணுவம் தடுப்பதாக செய்தி வருகிறதே?
கருணாநிதி: இன்று காலையில் கூட முறையாக வழங்கப்படுவதாக செய்தி வந்தது. தவறு நடப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது சரியல்ல.
கேள்வி: இலங்கை போன்ற சிறிய நாடு, இந்தியா போன்ற பெரிய நாட்டை மதிக்காததற்கு என்ன காரணம்?
கருணாநிதி: டெல்லிக்குச் செல்லும்போது அதைப்பற்றியெல்லாம் விரிவாகப் பேசுகிறோம்.
கேள்வி: வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தங்களை சந்திக்க வந்தபோது சில உறுதி மொழிகளையெல்லாம் கொடுத்தார். அதன் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா?
கருணாநிதி: மீனவர்கள் சுடப்பட்டு வந்த சம்பவங்கள் நின்றிருக்கின்றன. பட்டினி கிடக்கின்ற தமிழர்களுக்கு உணவு, அவர்களுடைய தேவைகளுக்கான உடை, மருந்து போன்றவை மத்திய அரசின் தூண்டுதல் காரணமாக வழங்கப்பட்டு வருகின்றன. இவைகளுக்கெல்லாம் மேலாக உள்ள குறைபாடு, வேதனை போர் நிறுத்தம் நடைபெறவில்லையே என்பது தான்.
கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்புகிறீர்கள், நிதி வசூலித்துக் கொடுக்கிறீர்கள், விரைவாக நடவடிக்கை எடுக்க முயலுகிறீர்கள். ஆனால் ஜெயலலிதா நீங்கள் பதவி விலக வேண்டுமென்று திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறாரே?
கருணாநிதி: என் மீதுள்ள பரிதாபம் தான் காரணம். இவ்வளவு கஷ்டப்படுகிறாரே என்பதற்காகத் தான் அவர் அப்படி கூறுகிறார்.
கேள்வி: மத்திய அரசு கடுமையாகச் செயல்பட வேண்டுமென்று சொல்லியிருக்கிறீர்கள். மத்திய அரசுக்கு தரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று சொல்லலாம் அல்லவா?
கருணாநிதி: இப்போதுள்ள மத்திய அரசிடம், அந்த அளவிற்கு மிரட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
கேள்வி: இன்றைக்கு நடந்த கூட்டத்தில் பாமக கலந்து கொண்டுள்ளது. இது திமுக-பாமக இடையிலான பிணக்குத் தீர்வதற்கான வாய்ப்பை உருவாகியிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?. ஏனென்றால் அவர்களை கூட்டணியை விட்டு விலக்கினீர்களே?
கருணாநிதி: எங்களுக்குள் ஏதும் தகராறு ஏற்படவில்லை. விலக்கியதாகச் சொல்வதெல்லாம் தவறு. அப்படிக் கூறுவது அவமரியாதையான வார்த்தைகள். யாரையும் வெளியே போ என்று சொல்கிற அளவிற்கு நாகரிகமற்றவர்கள் அல்ல நாங்கள். எங்களுடைய வருத்தத்தைத் தெரிவித்து கொண்டோம். அவர்கள் தங்களுடைய நிலைமையை விளக்கினார்கள். அவ்வளவு தான்.
கேள்வி: இலங்கையிலே அதிபராக ராஜபக்சே இருக்கிற வரை பிரச்சினை தீராது என்று சிலர் சொல்வதைப் பற்றி...?
கருணாநிதி: அது நம் ஆற்றல், அறிவு, வைராக்கியம், தமிழர்களுடைய ஒற்றுமை ஆகியவற்றைப் பொறுத்தது.
கேள்வி: இலங்கையிலே தனி நாடு உருவாவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா?
கருணாநிதி: அதையெல்லாம் நான் யூகித்துச் சொல்ல முடியாது.
0 comments:
Post a Comment